அல்முஷ்ரிப்||
முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினருமான பீ.எம்.ஆஷிகை , ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்வாங்குவற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தளத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் சிலர் இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குற்பட்ட பிரதேசங்களில் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நம்பிக்கையுடனும், பொறுப்புடனும் செயற்படக் கூடிய ஒருவரை கட்சியில் இணைத்துக்கொள்ள புத்தளத்தைச் சேர்ந்த சிலரால் ஆலோசிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இதன் அடிப்படையில் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி உட்பட கட்சியின் சிரேஷ் உறுப்பினர்களுக்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, அ.இ.ம.கா கட்சியின் புத்தளம் மாவட்ட முக்கியஸ்தரும், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பீ.எம்.ஆஷிகின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பீ.எம்.ஆஷிக் அவர்களோடு இந்த விடயம் தொடர்பில் பேசுவதற்கு சிலர் முயற்சி செய்த போதிலும், ஆஷிக் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், கட்சியில் இணைந்து சில பொறுப்புக்களை பெற்றுக்கொள்ளுமாறும் அவ்வப்போது வரும் உள்ளூர் மட்ட தொலைபேசி அழைப்புகளையும் ஆஷிக், தவிர்த்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பீ.எம்.ஆஷிக் அவர்களை RJS தமிழ் இணையத்திற்காக தொடர்புகொண்டு கேட்டதற்கு,
இந்த விடயம் தொடர்பில் ஐ.ம.சக்தி புத்தளம் மாவட்ட உறுப்பினர்கள் ஒரு சிலர் என்னிடம் பேசினார்கள். கற்பிட்டி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த அந்த கட்சி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அதற்கு ஒருவரை நியமிக்க கட்சி எதிர்பார்ப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதற்கு நான் பொருத்தமானவன் என அடையாளம் காணப்பட்டதாகவும், என்னை கட்சியில் இணைப்பதற்கும், சில பொறுப்புக்களை வழங்குவதற்கும் உயர்மட்டம் விருப்பத்தோடு இருப்பதாகவும் சொன்னார்கள்.
எனினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு நீண்ட காலமாக பயணிக்கும் நான் அந்த கட்சியை விட்டு வேறு எந்த கட்சியோடும் இணைந்துகொள்ளும் எண்ணமில்லை என்றும் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் நான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன்.
இந்த விடயம் சம்பந்தமாக ஒரு சில வட்சப் குழுக்களிலும் பேசப்படுகிறது. இந்த விடயங்கள் தொடர்பில் பேசப்படும் வட்சப் குழுக்களிலும் இதுதொடர்பில் எனது உறுதியான நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
நான் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிக்கு நான் விசுவாசமாக இருந்து வருகிறேன். நான் கட்சியை நம்புகிறேன். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், கட்சித் தலைவரும் என்மீது அதீத நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
எனது ஆரம்ப அரசியல் பயணமும், இறுதி அரசியல் பயணமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு மாத்திரம்தான் இருக்குமே தவிர, பணத்திற்காக, பதவிக்காக எந்த சந்தர்ப்பத்திலும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை விட்டு வேறு எந்தக் கட்சிக்கும் மாறப்போவதில்லை என்றார்.
