ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தில் வாழும் மூவின மக்களின் நல்வாழ்வுக்கான பணியில் ஈடுபட்டுவரும் முந்தல் கீரியங்கள்ளி பிரதேசத்தில் உள்ள சென்ரல் ஹார்ட்வெயார் ( Central Hardware) சிறந்த வர்த்தக நிலையத்திற்கான வியாபார அபிமான பொன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் மன்றம் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் செய்னுலாப்தீன் முஹம்மது இர்ஷாத் அவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்துள்ளது.
மேலும், சென்ரல் ஹார்ட்வெயார் ( Central Hardware) உரிமையாளரும், சமூக சேவையாளருமான செய்னுலாப்தீன் முஹம்மது இரஷாத் , "ருஹூனு பிஹிடி மாயாபிமானி தேச கிதௌசி ஸ்ரீலங்கா புத்ர" எனும் உயரிய கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மன்றத்தின் தலைவர் மோதரவானே அமிலஸ்ரீ தேரர் தலைமையில் இந்த நிகழ்வு இன்று (20) அநுராதபுரத்தில் இடம்பெற்ற போதே இவர் கௌரவிக்கப்பட்டார்.
மக்கள் மத்தியில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இதன்போது கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் மன்றத்தின் கோரிக்கைக்கு அமைய, பிரதேச செயலகங்கள் ஊடாக சமூகத்தில் பணியாற்றுவோர் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்ட பெயர் விபரங்களுக்கு அமைய, அவர்களின் சேவைக்கு ஏற்ப அவர்களுக்கான கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முந்தல், தாராக்குடிவில்லு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவரான செய்னுலாப்தீன் முஹம்மது இர்ஷாத், அக்கரவெளி ஜூம்ஆ மஸ்ஜிதின் ஜனாஸா சங்கத்தின் பொருளாளராகவும், அக்கரவெளி தாருஸ்ஸலாம் மஸ்ஜிதின் உப தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவர், காதர் முகைதீன் செய்னுலாப்தீன் - இல்முநிசா தம்தியினரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
