சாஹிப், முஹம்மட் ரிபாக்
புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் உட்பட தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள் , உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் மன்றம் இவர்களுக்கான கௌரவ பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளன.
மன்றத்தின் தலைவர் மோதரவானே அமிலஸ்ரீ தேரர் தலைமையில் அநுராதபுரத்தில் இந்த நிகழ்வு நேற்று (20) இடம்பெற்றது.
மக்கள் மத்தியில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இதன்போது கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் மன்றத்தின் கோரிக்கைக்கு அமைய, பிரதேச செயலகங்கள் ஊடாக சமூகத்தில் பணியாற்றுவோர் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்ட பெயர் விபரங்களுக்கு அமைய, அவர்களின் சேவைக்கு ஏற்ப அவர்களுக்கான கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரியான அகில இலங்கை சமாதான நீதவான் அல்ஹாஜ் பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதனை கௌரவிக்கும் விதமாக அவருக்கு "தேசமான்ய, லங்கா புத்ர" எனும் உயரிய கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை உதைப்பட்ட சம்மேளனத்தில் நீண்ட காலமாக உப தலைவராக கடமையாற்றி வந்த பதுர்தீன் முஹம்மது ஹிசாம், உதைப்பந்தாட்டத் துறையில் சுமார் 35 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்டவராகவும் காணப்படுகின்றார்.
மேலும், புத்தளம் மத்தியஸ்தர் சபையில் உப தலைவராகவும் கடமையாற்றி வரும் இவர், அகில இலங்கை (முஸ்லிம்) திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றுகின்றார்.
இதேவேளை, நாடறிந்த கவிஞரும், ஆசிரியருமான சுஹைப் எம் காசிம் ஜே.பி. "சேதபந்து , லங்காஸ்ரீ புத்ர" எனும் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள அதேவேளை, புத்தளத்தில் வாழும் மூவின மக்களின் நல்வாழ்வுக்கான பணியில் ஈடுபட்டுவரும் முந்தல் கீரியங்கள்ளி பிரதேசத்தில் உள்ள சென்ரல் ஹார்ட்வெயார் சிறந்த வர்த்தக நிலையத்திற்கான வியாபார அபிமான பொன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்ரல் ஹார்ட்வெயார் உரிமையாளரும், சமூக சேவையாளருமான செய்னுலாப்தீன் முஹம்மது இரஷாத் , "ருஹூனு பிஹிடி மாயாபிமானி தேச கிதௌசி ஸ்ரீலங்கா புத்ர" எனும் உயரிய கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், தொழிலதிபரும், சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஐயூப்கான் ஜே.பி, சமூக சேவையாளர் , அகில இலங்கை சமாதான நீதவான் எம்.ரியாஸ் ஜே.பி., ஆகியோர் "தேசமான்ய, ஸ்ரீலங்கா புத்ர" எனும் கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களில் இணைந்து நீண்ட காலமாக சமூக மட்டத்தில் பணியாற்றி வரும் சமூக சேவையாளர் ஏ.ஆர்.ஏ.கான் ஜே.பி. "தேசபந்து, லங்காஸ்ரீ புத்ர" எனும் கௌரவ பட்டமும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய ஆர்.எம்.ரிஸ்லி "சேதபந்து, தேசாபிமானி, லங்காஸ்ரீஸ்ரீ புத்ர" எனும் கௌரவ பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுடன் புத்தளம் , ஆராச்சிக்கட்டுவ, கருவலகஸ்வெவ உள்ளிட்ட பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களும் இதன்போது கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவிகலகப்பட்டமை குறிப்பிடத்தக்கது.