லெபனான் வர்த்தகரிடமிருந்து 14000 டொலர் பணத்தை திருடிய சீனப் பிரஜை கைது...!

ரஸீன் ரஸ்மின்

லெபனான் பிரஜை ஒருவரிடமிருந்து 14,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான 48 வயதுடைய சீன பிரஜை, இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தபோது, அவரை குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பணத்தை திருடிய சீன நபரை கைது செய்ய கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும், விமான நிலைய சுற்றுலா பொலிஸாரும் இணைந்து பல தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும், அவரை கைது செய்ய முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனப் பிரஜை கைது செய்யப்பட்ட போது அவரிடம் 827,712.76 ரூபா பெறுமதியான உலகின் பல்வேறு நாடுகளின் நாணயத் தாள்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தான் உலகம் முழுவதும் தேயிலை விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர் எனவும், அதன் மூலம் கிடைத்த பணம்தான் தன்னிடம் இருப்பதாகவும் கைதான சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் அதுதொடர்பாக மேலதிக விசாரணையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் பின்னர் சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.

லெபனான் வர்த்தகர் மற்றும் அவரது தாயாருடன், ஓமானின் மஸ்கட்டில் இருந்து புதன்கிழமை 13  ஆம் திகதி காலை 07.20 மணியளவில் ஓமன் எயார்லைன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போதே சந்தேக நபர் அவரிடமிருந்து பணத்தை திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post