சாஹிப்
பாடசாலை கல்வி மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்து விட்டு சர்வதேச பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பை மேற்கொள்ள இருப்பவர்களுக்கான இலவச வழிகாட்டல் சர்வதேச உயர் கல்வி கருத்தரங்கு புத்தளம் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சமூக ஆர்வலரும், சந்தை மேலாளர் முஜாஹித் நிசார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான வளவாளராக ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களில் பொறியியல் துறை விரிவுரையாளரும், ஐக்கிய இராச்சியத்தின் சசக்ஸ் பல்கலைக்கழக சசக்ஸ் இன்னோவேசன் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஏ.சாதிக் கலந்து கொண்டார்.
ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான சந்தர்ப்பத்தை UNISMART UK மற்றும் SUSSEX CAMPUS கல்வி நிறுவனத்தினர் மிக குறைந்த செலவில் வழங்கி வருகின்றனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இலங்கையையும் ஏனைய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளையும் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கான முற்று முழுவதுமான ஆலோசனை சேவைகளை வழங்கி வருவதுடன், தொழில் வாய்ப்புகளையும் வழங்கி, UK இல் வெளிநாட்டு மாணவர்களின் வாழ்வை இலகுபடுத்தும் சேவைப் பணிகளை UNISMART UK மற்றும் சசக்ஸ் கல்வி நிறுவனம் ஆகியவை வழங்கி வருகின்றன.
இந்த இலவச செயலமர்வில் கல்வியலாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




