ரஸீன் ரஸ்மின்
புத்தளத்தில் இயங்கி வரும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் சமூகம் நோக்கிய பயணம் எனும் கருப்பொருளில் செயற்திட்ட மீளாய்வு நிகழ்வும், சான்றிதழ் வழங்கும் வைபவமும் இன்று புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணிப்பாளரும், பெண் செயற்பாட்டாளருமான ஜூவைரியா முஹைதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், சமாதான நீதிவான்கள், உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் பெண்களின் உரிமை, மற்றும் பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி தொடர்பில் புத்தளம் மாவட்டத்தில் இன, மத வேறுபாடுகளின்றி கடந்த 10 வருடங்களுக்கு மேல் சேவைபுரிந்து வருகின்றது.
இதன்போது, ஆசிய மன்றத்தின் நிதி அனுசரணையுடன் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையாகத்தினால் 2020 தொடக்கம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன.
மேலும், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையாகத்தினால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆற்றப்படும் சேவைகள் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் வருகை தந்தவர்களுக்கு விளக்கப்படுத்தினார்.
அத்தோடு, விஷேட பேச்சாளராக கலந்துகொண்ட அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) விஷேட உரையும் இடம்பெற்றது.
அத்துடன், இஸ்லாமிய கண்ணோட்டத்தில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு, இஸ்லாத்தில் பால்நிலை சமத்துவம், சிறுபான்மை வாழ்வொழுங்குகள், குடும்ப வன்முறை பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம், சூறத்துல் நிசாவின் பார்வையில் பெண்கள், இஸ்லாத்தில் பெண்களின் வகிபாகமும், தலைமைத்துவமும், சூறா நூரின் ஒளியில் ஒழுக்கமும், ஆடையும் எனும் பல தலைப்புக்களில் நடைபெற்ற செயலம்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு, முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணிப்பாளரும், பெண் செயற்பாட்டாளருமான ஜூவைரியா முஹைதீன் ஆற்றிவரும் பணிகளை கௌரவித்து பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















