கள்ளக் கணவனால் பெண் கொலை...!

ரிபாக்

அநுராதபுரம் - தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜாங்கனை நவசிரிகம பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கொலையுண்ட பெண்ணின் இளைய சகோதரரின் வீட்டிலேயே கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமணமாகாமல் வாழ்ந்து வந்த கள்ளக் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பிள்ளைகளின் தாயான தேவதா பேடிகே ரேணுகா தீபானி சோமதாச (வயது 53) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட குறித்த பெண் தனது வாழ்வாதார தொழிலாக மீன் பிடித் தொழிலை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் பின்புறமுள்ள வீட்டிலேயே வசித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர், வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதுடன், இந்த பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் நபருடன் சுமார் 13 வருடங்களாக தொடர்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தக் கொலையை செய்ததாக கூறப்படும் நபர் ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். .

எனினும், குறித்த பெண்ணும், நபரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர் எனவும், பெண்ணின் இளைய மகனுடன் ஒன்றாக இருந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

ஒரு மாதத்திற்கு முன்னர் இளைய மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான விசாரணையை நடத்த "சமத்த மண்டல"  இணக்க சபைக்கு பொலிஸாரால் அனுப்பப்பட்டுள்ளது.

தாய்க்கும், பிள்ளைக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இணக்க சபையில் நேற்றைய தினம் விசாரணை நடத்தப்பட இருந்த போதிலும், குறித்த இருவரும் இணக்க சபைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், நேற்று பிற்பகல் குறித்த பெண் வசிந்துவந்த வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் வைத்து “நீங்கள் இணக்க சபைக்கு செல்கிறீர்களா?” என்று பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் கேட்டுள்ளார் எனச் சொல்லப்படுகிறத்து.

"இல்லை நான் போகமாட்டேன்" எனத் தெரிவித்த குறித்த பெண் மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் 2.30 மணியளவில் தனது சகோதரனின் வீட்டுக்கு வந்து மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அங்கேயே தங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த சந்தேக நபர், நலம் விசாரிப்பதைப் போல அருகில் சென்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் பெண்ணின் மார்பிலும், உடம்பில் சில இடங்களிலும் குத்திக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த குறித்த பெண் அங்கிருந்தவர்களால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கொலையை செய்த கொலையாளியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post