புத்தளம் - 4ஆம் கட்டையில் ஆட்டோ விபத்து; இளம் தாய் உயிரிழப்பு - மூவர் வைத்தியசாலையில்

- சாஹிப், ரிபாக் -

புத்தளம் - மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பகுதியில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை 06) இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், மூவர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் - சவீவபுரம் பகுதியைச் ரிஜான் சித்தி நிஹாரா ( வயது 42) எனும் ஆறு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்த குறித்த தாய் தனது இரண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, புத்தளம் - மன்னார் வீதியில் உள்ள 4ஆம் கட்டையிலிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றில் புத்தளம் சவீவபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, புத்தளம் - 4ஆம் கட்டைப் பகுதியில் குறித்த முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென வீதியினை கடந்து சென்ற கட்டாக்காலி மாடு ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணம் செய்த முச்சக்கர வண்டி சாரதி உட்பட இளம் தாயும், இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும், குறித்த இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், முச்சக்கர வண்டி சாரதி மற்றும் உயிரிழந்த தாயின் இரண்டு பிள்ளைகளுக்கும் சிறிய அளவிலான காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தாயின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

இந்த விபத்தின் போது, குறித்த இளம் தாயின் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த இளம் தாயக்கு ஏற்கனவே தலைப் பகுதியில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளார் எனவும் புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மேலும் தெரிவித்தார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post