ரஸீன் ரஸ்மின்
புத்தளம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் நான்கு பாலர் பாடசாலைகள் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலையின் மைதானத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது.
கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் பி.எம்.முஸ்னி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைஸர் மரிக்கார் உட்பட கோட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் , பழைய மாணவர் சங்கங்களின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
பாடசாலைகள் தோறும் சிறுவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கல் - வாங்கல் உட்பட வியாபார நுட்பம் உள்ளிட்ட துறைகளில் களப்பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில்தான் கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் தரம் 1, தரம் 2 மாணவர்களின் சந்தையும், கணமூலையில் உள்ள மதீனாபுரம் அல் பிர்தௌஸ் பாலர் பாடசாலை, அல் நூரியா பாலர் பாடசாலை, தாஹா பாலர் பாடாசாலை, ரஹ்மத்புரம் நூராணியா பாலர் பாடசாலை மாணவர்களின் சந்தையும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி சிறுவர் சந்தையில் மரக்கறி கடைகள், சில்லறைக் கடைகள், பூமரக்கடைகள், கூல்பார் கடைகள், பேக்கரி உற்பத்திகள், புத்தக கடைகள், சிற்றூண்டிக் கடைகள், பழக் கடைகள், உணவகங்கள் உட்பட பல வர்த்தக நிலையங்கள் காணப்பட்டன.
இந்த சிறுவர் சந்தை நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளும், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் ஆவலுடன் பொருட்களை வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.