தனக்கு வழங்கப்பட்ட அமானிதத்தை சரியாக நிறைவேற்றினாரா புத்தளம் நகர பிதா ரபீக்; விளக்குகிறார் ஷதா பாயிஸ்


எங்களுடைய தந்தையும் இந்த மண்ணின் தலைவருமாகிய மறைந்த மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களுடைய சபையின் காலம் முடிவடைகிறது.

ஒரு பக்கம் அவருடைய சபையின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே எனது தந்தையின் ஆயுள் முடிந்து போனதை எண்ணி கவலையாக இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் அவருடைய சபை அவருடைய சபையாகவே முடிவதையிட்டு மகிழ்ச்சியாகவும் உள்ளது.

எத்தனையோ சதிகளையும், போராட்டங்களையும் இறைவன் உதவியால் முறியடித்து தனது அரசியல் சாணக்கியத்தால் எனது தந்தை வென்றெடுத்த இந்த சபையை அவரது மறைவுக்குப் பின்பு வழி நடாத்தும் பொறுப்பில் அமர்ந்த நகரபிதா Msm Rafeek அவர்கள் எத்தனையோ விமர்சனங்களுக்கும், சதிகளுக்கும் மத்தியில் இந்த சபையை நட்டம் அடைய விடாது மக்கள் அபரீத பயனடையும் சிறந்த சபையாக தொடர்ந்து வந்து வெற்றிகரமாக தனது நிர்வாகப்பணிகளை நிறைவுக்கு கொண்டுவந்தமைக்காக முதலில் எங்களது குடும்பம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருக்கு உறுதுணையாக நின்ற ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தந்தையின் பாடசாலைப் பராயம் முதல் அவருடைய நெருக்கமான நண்பனாகவும், அவருடைய உண்மையான விசுவாசியாகவும் அவரோடு ஒன்றாய் பயணித்த ரபீக் uncle எனது தந்தையுடன் இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாடு காரணமாக விலகிச் சென்றதையும், இறுதியில் எனது தந்தை மரணிப்பதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்பு மீண்டும் கை கோர்த்துக் கொண்டதையும் எங்களது தந்தையோடு ஏனையோரை விட அதிகமாக நெருங்கிப் பழகும் நாங்கள் நன்கறிவோம்.

உறவுகளுக்குள் சிறு சிறு கசப்புகள் ஏற்படுவது ஒன்றும் புதிய ஒரு விடயம் அல்ல. அதற்காக ஒன்றும் ரபீக் uncle அவர்கள் எனது தந்தைக்காக செய்த தியாகங்கள் இல்லையென்றாகிவிடாது.

எனது தந்தை மறைந்த பின்பும் கூட பதவி வந்துவிட்டதும் மாறிவிடும் சிலரைப் போல் மாறிவிடாமல் எந்த இடத்திலும் எனது தந்தையை விட்டுக் கொடுத்து விடாமல், செல்லும் இடமெல்லாம் அவருடைய பெயரை உச்சரித்து, செய்கின்ற சேவைகளில் எல்லாம் அவருடைய முகத்தை பிரசன்னமாக்கி, அவற்றில் அவருடைய பங்கை ஊர்ஜிதப்படுத்தி, எனது தந்தைக்கு வந்த போலி விமர்சனங்களை உண்மையாக விடாமல் பாதுகாத்து, எங்களது தந்தை மறைந்ததற்குப் பின் எங்களது குடும்பத்தின் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் பங்கேற்று பல உதவிகளை செய்து தந்த ரபீக் uncle அவர்களுக்கு எம்மிடத்தில் தனியான ஒரு மரியாதையும் அன்பும் உண்டு.

எனவே எனது தந்தைக்கு மக்கள் அளித்த அமானிதத்தை அழகான முறையில் பாதுகாத்தமைக்கும், உங்களது பணிகளை தடையின்றி தொடர்வதற்கும், உங்கள் விருப்பப்படியே மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்ற  தலைவராக எனது தந்தை அமர்ந்த கதிரையை அலங்கரிப்பதற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஷதா பாயிஸ் -

Post a Comment

Previous Post Next Post