கடல் அலையின் கோரப்பிடி; நொடிப்பொழுதில் பறிபோன மூன்று உயிர்கள் - புத்தளத்தில் சோகத்தில் முடிந்த குடும்ப சுற்றுலா!

ரஸீன் ரஸ்மின்

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட தளுவ , முகத்துவாரத்தில்  நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டும் இளம் யுவதிகளும், இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துயரச் சம்பவம் நேற்று (06) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

புத்தளம் , தில்லயடி - உமரபாத் பகுதியைச் சேர்ந்த ரம்சான் பாத்திமா ரிஸ்கானா(வயது 17), ரம்சான் பாத்திமா சஹ்ரா (வயது 19) மற்றும் அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரரான இஸ்மத் முஹம்மது உசாம் (வயது 25) ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிள்ளைகளான இரண்டு இளம் சகோதரிகளும், உயிரிழந்தவர்களின் தாயின் இளைய சகோதரியின் மகனான 25 வயதுடைய இளைஞனும் இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

விடுமுறையை சந்தேஷமாக கழிப்பதற்காக சனிக்கிழமை (06) மாலை 3 மணியளவில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் நுரைச்சோலை - தளுவ முகத்துவாரத்திற்கு சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற போது, தளுவ முகத்துவாரத்தில் மாலைப் பொழுதில் இரண்டு சகோதரிகளும் அருகருகே நீராடி குதூகலித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் பலத்த காற்று மற்றும் கடும் நீரோட்டம் காரணமாக யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த இரண்டு சகோதரிகளையும் நீர் இழுத்துச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இரண்டு சகோதரிகளையும் கடல் நீர் இழுத்துச் செல்வதை அவதானித்த சகோதரர் அவ்விருவரையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் பாய்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இரண்டு சகோதரிகளும் நீருக்குள் மூழ்கிய நிலையில், அவர்களை காப்பாற்றுவதற்காக நீருக்குள் பாய்ந்த அந்த இளைஞரும் நீருக்குள் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார் எனவும் அதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனின் தந்தை முழுமையாக முயற்சி எடுத்த போதிலும் அந்த முயற்சியும் பலனளிக்காது குடும்பத்தினர் கண் முன்னே இரண்டு சகோதரிகளும், அந்த இளைஞரும் நீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இதனையடுத்து , அங்கிருந்த சிலரின் உதவியுடன் கடல் நீருக்குள் மூழ்கிய இளம் யுவதிகள் இருவர் மற்றும் இளைஞர் ஆகிய மூவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவர்களை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் குதித்து உயிரிழந்த இளைஞரான இஸ்மத் முஹம்மது உசாம் சிங்கப்பூரில் ஹோட்டலொன்றில் பணியாற்றி வந்ததுடன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தினரை பார்ப்பதற்காக விடுமுறையில் நாட்டுக்கு வருகை தந்திருந்தார் எனவும் இம்மாதம் 26 ஆம் திகதி மீண்டும் தொழில் நிமித்தம் சிங்கப்பூருக்கு செல்ல இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரம்சான் பாத்திமா ரிஸ்கானா என்பவர் தில்லையடி - அல்ஜித்தாவில் இயங்கி வரும் பெண்கள் அரபு மதரஸா ஒன்றில் கல்வி கற்று பட்டமளிப்பு விழாவுக்காக காத்திருந்தார் என்றும், அவரது சகோதரியான ரம்சான் பாத்திமா சஹ்ரா எனும் மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்தார் எனவும் குடும்ப உறவினர்கள் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த மூவரின் ஜனாஸாக்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம், சம்பவ இடத்தை பார்வையிட்டு பின்னர் ஜனாஸா மீதான மரண விசாரணையை நடத்தினார்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரிகள் மற்றும் இளைஞன் ஆகியோரது மரணம் முழுப் புத்தளம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post