ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில், கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த தாயும் அவரது இளம் மகளும் உயிரிழந்துள்ளதாக ராஜங்கனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிர்வாக அதிகாரியான அவரது மூத்த மகள் 32 வயதான சஜீனி மகேஷிகா எனும் ஒரு பிள்ளையின் தாயும் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 27 ஆம் கட்டை பகுதியில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்ட கோர விபத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த தாய் மற்றும் மூத்த மகளையும் அங்கிருந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இவ்வாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகள் கடந்த 2ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எனினும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரவில் சிகிச்சை பெற்று வந்த தாய் இன்று (04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
