அஷ்ரிக்
இலங்கையின் பல்பரிமாண வறுமையை ஒழிக்கும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “பிரஜா சக்தி 2026 – ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” தேசிய வேலைத்திட்டம், 2026.06.03 அன்று முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதியமைப்பாளரும் முந்தல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக மற்றும் புத்தளம், கல்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஜே. எம். பைசல் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விசேட திட்டத்தின் கீழ், முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கையளிக்கப்பட்டன.
அதன் முதற்கட்டமாக, புழுதிவயல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகால தேவையாக இருந்து வந்த பாடசாலை மைதானத்திற்கான மலசலகூடக் கட்டிடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் முந்தல் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், புழுதிவயல் பாடசாலை அதிபர், புழுதிவயல் ஜும்ஆ பள்ளி நிர்வாகிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகள், பிரஜா சக்தி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.







