ரஸீன் ரஸ்மின்
புத்தளம், கற்பிட்டி இப்பந்தீவு மற்றும் ஆலங்குடா ஆகிய கடற்பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருதொகை பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவன படையினர் ஆலங்குடா கடற்பிரதேசத்தில் நடத்திய சிறப்பு சோதனையின் போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றை கடற்படையினர் பரிசோதனை செய்தனர்.
இதன்போது, 32 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பெருந்தொகையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகள் என்பவற்றுடன் குறித்த லொறியையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, கற்பிட்டி, இப்பந்திவு கடற்பிரதேசத்தில் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு டிங்கி படகுகளை கடற்படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த டிங்கி இயந்திரப் படகுகளில் புச்சிக்கொல்லி தூள் வகைகள் இருந்துள்ளதுடன், அதனை கைப்பற்றிய கடற்படையினர் இரண்டு டிங்கி இயந்திர படகுகளையும் தமது பொறுப்பில் எடுத்தனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்திவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் குறித்த பூச்சிக் கொல்லிகள் , விதைகள் மற்றும் லொறி, இரண்டு டிங்கி படகுகள் என்பனவற்றை கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பூச்சிக்கொல்லிகள், விதைகள் மற்றும் டிங்கி இயந்திரப் படகுகள், லொறி என்பன மேலதிக நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.