ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பிரதேச சபையின் புதிய தலைவராக சுயேட்சைக் குழு (கிரிக்கெட் மட்டை சின்னம்) 1ம் இலக்கத்தில் போட்டியிட்டு போனஸ் ஆசனம் மூலம் சபைக்குத் தெரிவான ரதிக சஞ்சீவ இன்று (20) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேச சபையின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.என்.எம்.சஞ்சீவனி ஹேரத் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை இடம்பெற்றது.
இதன்போது, புதிய தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு பற்றி உறுப்பினர்களுக்கு சிங்களத்திலும், தமிழிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன், வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் புதிய தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு திறந்த முறையிலா அல்லது இரகசிய முறையிலா என்பதை பிரேகரிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து, இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கு ஏனைய உறுப்பினர்கள் தமது விருப்பத்தை தெரிவித்தனர்.
இதனையடுத்து, தலைவர் தெரிவுக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் அகில விராஜ் சம்பத் , ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இனோக் துஷார பத்திரகே மற்றும் சுயேட்சைக் குழு (கிரிகெட் மட்டை) உறுப்பினர் ரதிக சஞ்சீவ ஆகிய மூவரின் பெயர்கள் சபையில் முன்மொழியப்பட்டதுடன், உறுப்பினர்களுக்கு மத்தியில் இரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
இந்த வாக்களிப்பில் 25 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அகில விராஜ் சம்பத் 9 உறுப்பினர்களின் ஆதரவையும் , ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இனோக் துஷார பத்திரகே 4 உறுப்பினர்களின் ஆதரவையும் சுயேட்சைக் குழு உறுப்பினரான ரதிக சஞ்சீவ 12 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டனர்.
எனினும், புத்தளம் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக மூவர் போட்டியிட்டமையால், தலைவராக தெரிவாகும் உறுப்பினர், ஏனைய இரண்டு உறுப்பினர்களும் பெற்றுக்கொண்ட வாக்குகளை விட ஒரு வாக்கையேனும் கூடுதலாக பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில், குறித்த தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்குகளை ஒரு உறுப்பினரும் பெற்றுக் கொள்ளாமையினால் இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்களிப்பில் முதலாவது சுற்றில் ஆக குறைந்த வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இனோக் துஷார பத்திரகே ( 4 வாக்குகள்) , இரண்டாம் சுற்று போட்டியில் இருந்து நீக்கப்பட்டு தேசிய மக்கள் சக்தி சார்பில் அகில விராஜ் சம்பத் மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினரான ரதிக சஞ்சீவ ஆகியோருக்கிடையில் இரண்டாம் சுற்றுப் போட்டி இடம்பெற்றது.
இதில், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அகில விராஜ் சம்பத் 10 உறுப்பினர்களின் ஆதரவையும் , சுயேட்சைக் குழு உறுப்பினரான ரதிக சஞ்சீவ 13 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டனர்.
இதில் இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக அறிவிக்கப்பட்டதுடன், சுயேட்சைக் குழு உறுப்பினரான ரதிக சஞ்சீவ மூன்று மேலதிக வாக்குகளால் புத்தளம் பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, புத்தளம் பிரதேச சபையின் உப தலைவருக்கான தெரிவு உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய, திறந்த வாக்களிப்பாக நடத்தப்பட்டது.
இதன்போது, பொதுஜன ஐக்கிய முன்னணியின் போனஸ் ஆசனம் மூலம் உறுப்பினராக தெரிவான பமுனு ஆராய்ச்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.கே.எம்.லரீப் ஆகியோரின் பெயர்கள் சபையில் முன்மொழியப்பட்டன.
உப தலைவருக்கான திறந்த வாக்கெடுப்பில் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினரான பமுனு ஆராய்ச்சி 13 உறுப்பினர்களின் ஆதரவையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.கே.எம்.லரீப் 11 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டதுடன், புத்தளம் பிரதேச சபையின் உபதலைவராக பமுனு ஆராய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உப தலைவர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பில் சுயோட்சைக் குழு (மோட்டார் சைக்கிள்) உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.
இதேவேளை, புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவின் போது பிரதேச சபையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அத்துடன், பிரதேச சபையை அண்மித்த பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களும் பெரும் எண்ணிக்கையானோர் வருகை தந்திருந்தனர்.