ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி - ஆலங்குடா மரவஞ்சேனை ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் சுய தொழில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த பெண்களுக்கான சான்றிதழ் வழங்கல் மற்றும் அந்த பெண்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சியும் ஆலங்குடா மரவஞ்சேனையில் (அல்ஹிஜ்ரா நகர்) அண்மையில் இடம்பெற்றது.
ஆலங்குடா - மரவஞ்சேனை ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எம்.எஸ். ரனீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமேல் மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் சாலிய பீரிஸ், கற்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கற்பிட்டி பிராந்திய திட்ட முகாமையாளர் சுபுன் , இலங்கை போக்குவரத்து சபை முன்னாள் உத்தியோகத்தர் ஐ.இல்யாஸ் ஜே.பி., உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர் உட்பட கள உத்தியோகத்தர்கள், உலமாக்கள், பயிற்சி ஆசிரியர் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த பயிற்சி நெறியானது ஆலங்குடா மரவஞ்சேனை ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த ஒரு வருட காலமாக நடத்தப்பட்டது.
இதன்போது, தையல் அலங்காரம், கேக் , பாபீஸ். நுளம்பு வலை , மலர் அலங்காரம் என 18 வகையான பயிற்சி நெறிகளை நிறைவு செய்த 82 பேருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் , பெண்களின் உற்பத்தி பொருட்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, ஆலங்குடா மரவஞ்சேனை ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் சிறிய ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.கமால் தெரிவித்தார்.
0 Comments