நீரோடையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு - மதுரங்குளியில் சோகம்...!

சாஹிப்

புத்தளம் - மதுரங்குளி, மூக்குத்தொடுவா பகுதியில் உள்ள சிறிய நீர்நிலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர், அந்த நீர்நிலைக்குள் வீழ்ந்து நேற்று (02) உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளி - மூக்குத்தொடுவா பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் பெர்னாண்டோ எனும் 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர் நேற்று (02) வெள்ளிக்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக மூக்குத்தொடுவா பகுதியில் உள்ள சிறிய நீர்நிலையொன்றுக்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அங்கு மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்  திடீரென மயங்கி குறித்த நீர் நிலைக்குள் வீழ்ந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த நபரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் வைத்தியணாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் மதுரங்குளி பொலிஸார் கூறினர்.

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post