ரஸீன் ரஸ்மின்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட முன்னாள் இளைஞர் அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர சபை வேட்பாளருமான எம்.என்.எம்.நஸ்ரக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை இன்று (16) கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் கே.ஏ.பாயிஸின் தலைமைத்துவத்தின் கீழ் புத்தளத்தில் அரசியல் செயற்பாடுகளில் துடிப்புமிக்க இளைஞராக செயற்பட்டு வந்த இவர், முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் இளைஞர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டதுடன் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் நகர சபையின் வேட்பாளராகவும் களமிறங்கினார்.
புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த இவர், அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார்.
புத்தளம் மாவட்ட அபிவிருத்தி உள்ளிட்ட மக்களின் தேவைகளை அறிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயற்பட்டு வருவதனை அவதானித்த பின்னர் அக்கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கு தீர்மானித்ததாக எம்.என்.எம்.நஸ்ரக் தெரிவித்தார்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட இவருக்கு அக்கட்சியின் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.