முந்தல் விபத்தில் மூவர் படுகாயம்

சாஹிப்

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற குறுந்தூர தனியார் பஸ் ஒன்று முந்தல்  வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்ற போது, மதுரங்குளியில் இருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற முச்சக்ர வண்டியொன்று பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி - ஹிதாயத் நகரைச் சேர்ந்தவர்களே இவ்விபத்துச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் தொழில் நிமித்தம் கட்டாருக்கு செல்வதற்காக மதுரங்குளி - ஹிதாயத் நகரில் இருந்து முச்சக்கர வண்டியில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிப் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவரும் படுகாயமடைந்து முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் , அம்மூவரும்  மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் தனியார் பயணிகள் பஸ்ஸின் பின் பக்கமாக சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post