சஜித் பிரேமதாசவை பிரதமராகக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் - ஐ.ம.ச வேட்பாளர் தாஹிர்

ரஸீன் ரஸ்மின்

புதிய பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட்டு, தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் என்.டி.எம்.தாஹிர் தெரிவித்தார்.

மதுரங்குளி விருதோடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், அ.,இம.கா உயர்பீட உறுப்பினருமான முஹம்மது ஆஷிக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வேட்பாளர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், எம்.எச்.முஹம்மத், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பைசர் மரிக்கார், புத்தளம் பிரதேச சபையின் 

முன்னாள் உறுப்பினர் ரிபாஸ் நஸீர், புத்தளம் நகர சபையின் முன்னாளர் பிரதித் தலைவர் ஏ.ஓ.அலிகான் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் பேசிய வேட்பாளர் என்.டி.எம்.தாஹிர் மேலும் கூறுகையில்,

புத்தளம் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அதிகமான தேவைகள் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அதிகாரங்களில் இருந்தவர்களால் மக்களின் பிரச்சினைகள் உரிய முறையில் தீர்த்து வைக்கப்படவில்லை. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜீத் பிரேமதாசவை பிரதமராக கொண்டு  அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் புத்தளம் புதிய எழுச்சியை காணும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

மேலும், கற்பிட்டி பிரதேச சபை அதிக நிலப்பரப்பைக் கொண்ட ஒரு சபையாக காணப்படுகிறது. இதனால், மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதற்கு பிரதேச சபை பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகிறது. அதுபோல தமக்கான வேலைகளை செய்வதற்கு மக்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நாங்கள் அவதானித்து வருகிறோம்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானதும், கற்பிட்டி பிரதேச சபையை நகர சபையாகவும், கடையாமோட்டை (அக்கரைப்பத்து) பிரதேச சபையாகவும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் எமது முதல் பணியாகவும் இருக்கும்.

அத்துடன், பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவரும் புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்தி அங்கு காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது மாத்திரமின்றி, மத்திய அரசின் கீழ் அதனை கொண்டுவருவதற்கும் நாங்கள் முயற்சிகளை முன்னெடுப்போம்.

அரசியலில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட தலைவரின் கீழ் ஒரு எமது பலமான அணி இருக்கிறது. புத்தளம் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாயப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் நாங்கள் விரைவில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம். இளைஞர், யுவதிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

எனவே, கல்வி கற்று தொழில் வாய்ப்பை தேடும் இளைஞர், யுவதிகளுக்கும், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு எதிர்காலத்திற்காக ஏங்கும் இளைஞர், யுவதிகளுக்கும் நாங்கள் நல்ல திட்டங்களை கைத்திருக்கிறோம். எந்த துறைகளில் ஆர்வத்தை கொண்டிருக்கிறார்களோ அந்த துறைகளில் இளைஞர், யுவதிகளை பயிற்றுவித்து அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவும் நாங்கள் முயற்சிகளை எடுப்போம்.

மாத்திரமின்றி, முறையான வடிகாலமைப்பு வசதிகளையும் செய்து, வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும் திட்டங்களை வைத்திருக்கிறோம். சேதமடைந்து காணப்படும் கிராமப்புற வீதிகளையும் , ஏனைய வீதிகளையும் புனரமைப்பதற்கும், மீன்பிடி, விவசாய மற்றும் சுயதொழில் என்பனவற்றில் ஈடுபடுவோருக்கும் தேவையான மானியங்கள் உள்ளிட்ட உதவித்திட்டங்களையும் வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்ட மக்கள் எப்படி ஒற்றுமையோடு வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்தினார்களோ அதுபோல பொதுத் தேர்தலிலும் எமது கட்சிக்கு வாக்களித்து எமது கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் அத்தனை அபிலாஷைகளையும் நிறைவேற்ற முடியும் அதற்கான ஒரு அங்கீகாரத்தை தாருங்கள். 

மக்கள் மீது அன்பில்லாவதவர்கள் அரசியல் ரீதியாக காணப்படும் குரோதங்களுக்காக புத்தளத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஏஜேன்டுக்காளக திறைமறைவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, தலைவிரிதாடும் அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து மக்களை பாதுகாக்கப்பட வேண்டும். ஒற்றுமையாக வாக்களித்தால் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் புத்தளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபான்மை பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான வியூகங்களை வகுத்துதான் முன்னோக்கிச் செல்கிறோம் என்றார்.


Post a Comment

Previous Post Next Post