முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக என்.எம்.அமீன் மீண்டும் தெரிவு

ஏ.எஸ்.எம்.ஜாவித், இர்ஷாத் ரஹ்மதுல்லா

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை  கொழும்பு பிரதம தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய நாடுகள் இலங்கை வதிவிட இணைப்பாளர் மாா்க் அன்றி பிரன்ஜ் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் துாதுவர் கலாநிதி அலி றீசா டெல்கோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பெளசி, ரவூப் ஹக்கீம், வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  இந்தியா உயர் ஸ்தாணிகர் ஆலயத்தின் ஊடக இணைப்பாளர் நவ்யா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் நாடளாவிய ரீதியிலுள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதம பேச்சாளர்களாக பிரபல எழுத்தாளர் எம்.எல்.ஏ மன்சூர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான கே.ஏ எம் முஹமட் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சன்டே ஐலன்ட் பத்திரிகை ஆசிரியர் மெனிக் டி சில்வா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27வது சஞ்சிகை பிரதம அதிதி, கெளரவ அதிதி உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், சமூகத்திற்கு பங்காற்றிய 11 பேர் அதிதிகளால் கெளரவிக்கப்பட்டனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் திருமதி புர்ஹான் பீ இப்திக்கார், வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்தி முகாமையாளர் எம்.சித்தீக் ஹனிபா, பிறை எப்.எம்.வானொலி தலைமையதிகாரி பசீர் அப்துல் கையும், மூத்த ஊடகவியலாளர்களான சுஐப் எம் காசீம், சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹூசைன், தென் பிராந்திய ஊடகவியலாளர் எம்.எம்.எம் பசீர், உதயம் செய்தி ஆசிரியர் சிறாஜ் எம். ஷாஜகான் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் போரத்தின் உதவித் தலைவர் ஊடகவியலாளர் றிப்தி அலி தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஊக்குவிப்புக்காக கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இதன்போது 2024 - 2025 ஆண்டுகளுக்கான புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றதுடன் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம் . அமீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

தலைவர் தெரிவுக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் 84 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்ட காலமாக தலைவராக பணியாற்றி வந்துள்ள நிலையில் இம்முறையும் அவரை அதிகப்படியான உறுப்பினர்கள் வாக்களித்து தலைவராக தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.


புதிய தலைவராக மீண்டும் தெளிவான என்.எம்.அமீனுக்கு RJS தமிழ் இணையத்தளம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

பிரதம ஆசிரியர் - RJS தமிழ்

Post a Comment

Previous Post Next Post